Loading Posts...

நிதாஹஸ் டிராபி 2018: முத்தரப்பு தொடரில் இருந்து கிடைத்த சிறந்த XI

Cricket, Best XI, India, Sri Lanka, Rohit Sharma, Bangladesh

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இலங்கையில் நடந்த முத்தரப்பு டி20 தொடர் முடிவுக்கு வந்தது. இந்த முத்தரப்பு தொடரின் இறுதி போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது இந்தியா. ஒருகட்டத்தில் இந்திய அணி போட்டிக்குள் இல்லை என்றாலும், கடைசி 12 பந்துகளில் 34 ரன்கள் தேவைப்பட்டபோது, தமிழகத்தின் தினேஷ் கார்த்திக் தனது அதிரடி இன்னிங்ஸ் விளையாடி இந்திய அணிக்கு வெற்றி வாங்கி தந்தார்.

இந்த தொடரில் பல வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள், இந்நிலையில் இந்த மூன்று அணிகளில் இருந்து சிறப்பாக விளையாடிய வீரர்களை வைத்து ஒரு அணியை உருவாக்கியுள்ளோம்.

1. ரோகித் சர்மா

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அற்புதமாக செயல்பட்டு இந்திய அணிக்கு முத்தொடர் டிராபியை வென்று கொடுத்துள்ளார். இந்த தொடரை எதிர்பார்த்த படி தொடங்கவில்லை என்றாலும், கடைசி இரண்டு போட்டிகளில் 89 மற்றும் 56 ரன்கள் அடித்து இந்த தொடரில் விளையாடிய 5 போட்டிகளில் 176 ரன் குவித்துள்ளார் ரோகித்.

2. ஷிகர் தவான்

இந்திய அணியின் தொடக்கவீரர் ஷிகர் தவான் அவரது தெறி பார்மை இந்த தொடரிலும் காட்டினார். இறுதி போட்டியில் ஏமாற்றிவிட்டாலும், இறுதி போட்டிக்கு முன்னேற ஒரு முக்கிய காரணமாக இருந்தார். 198 ரன் குவித்த ஷிகர் தவான், இந்த தொடரில் அதிக ஸ்கோர் அடித்த வீரர்கள் பட்டியலில் 3வது இடத்தில் இருக்கிறார்.

3. குசால் பெரேரா

இந்த தொடர் இலங்கை அணிக்கு ராசி இல்லை என்றாலும், அந்த அணியின் அதிரடி வீரர் குசால் பெரேரா அனைவரையும் கவர்ந்தார். இந்த தொடரில் 204 ரன் அடித்துள்ள பெரேரா, இந்த தொடரில் அதிக ரன் குவித்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.

4. முஷ்பிகுர் ரஹீம்

இந்த தொடரின் இறுதி போட்டிக்கு வங்கதேச அணி முன்னேற முக்கிய காரணமே முஷ்பிகுர் ரஹீம் தான். இலங்கைக்கு எதிரான வாழ்வா சாவா போட்டியில் எதிரணியை புரட்டி போட்ட ரஹீம், இந்த தொடரில் 199 ரன் குவித்துள்ளார்.

5. சபீர் ரஹ்மான்

இறுதி போட்டியில் 68 ரன்னிற்கு 4 விக்கெட்டுகள் இழந்து வங்கதேச அணி திணறிய போது 77 ரன் அடித்து அணியை சரிவில் இருந்து மீட்டார். இந்த தொடரில் 147 ரன் அடித்திருக்கும் சபீர், வங்கதேச அணிக்காக அதிக ஸ்கோர் அடித்த வீரர்கள் பட்டியலில் 3வது இடத்தை பிடித்தார்.

6. தினேஷ் கார்த்திக்

பேட்டிங் வாய்ப்பு கிடைக்கும் போது பட்டையை கிளப்பிய தினேஷ் கார்த்திக், இறுதி போட்டியில் வெளுத்து வாங்கினார். 12 பந்துகளில் 34 ரன் தேவைப்பட்ட போது 8 பந்துகளில் 29 ரன் அடித்து அசத்தினார் தினேஷ் கார்த்திக்.

7. திசாரா பெரேரா

இலங்கை அணியின் ஆல்-ரவுண்டர் திசாரா பெரேரா பந்துவீச்சில் ஒரே விக்கெட் எடுத்து ஏமாற்றினாலும், பேட்டிங்கில் 95 ரன் அடித்து இந்த பட்டியலில் இடம் பிடித்தார்.

8. வாஷிங்டன் சுந்தர்

தமிழகத்தின் வாஷிங்டன் சுந்தர் இந்த தொடரில் அற்புதமாக செயல்பட்டார். தேவை படும் போது விக்கெட்டுகள் எடுத்து கொடுத்த சுந்தர், இந்த தொடரில் 8 விக்கெட்டுகள் கைப்பற்றி தொடர்நாயகன் விருதை தட்டிச்சென்றார். இறுதி போட்டியிலும் அதிரடி வீரர் லிட்டான் தாசை வந்த வேகத்தில் அனுப்பி 4 ஓவருக்கு 20 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.

9. யுஸ்வேந்த்ர சஹால்

இந்திய அணியின் மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் சஹால் இறுதி போட்டியில் 3 விக்கெட்டுகள் எடுத்தது மூலம், இந்த தொடரில் 8 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளனர்.

10. முஷ்டபிஸுர் ரஹ்மான்

வங்கதேச அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஷ்டபிஸுர் ரஹ்மான் ரன் அதிகமாக கொடுத்தாலும், தேவை பட்ட போது விக்கெட்டுகள் எடுத்திருக்கிறார். இந்த தொடரில் 7 விக்கெட் எடுத்த ரஹ்மான், இறுதி போட்டியின் 18வது ஓவரை மெய்டன் செய்தார்.

11. ருபேல் ஹூசைன்

முஷ்டபிஸுர் ரஹ்மானை போலவே அதிக ரன் வாரி கொடுத்தாலும், தேவை பட்ட போது விக்கெட்டுகள் எடுத்து கொடுத்தார் ருபேல். இறுதி போட்டியில் அதிரடி வீரர்களான சுரேஷ் ரெய்னா மற்றும் லோகேஷ் ராகுலின் விக்கெட்டை எடுத்து இந்திய அணிக்கு பிரஷர் கொடுத்த ருபேல், இந்த தொடரில் 7 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர்.

Silambarasan

The author didnt add any Information to his profile yet

Leave a Comment

Loading Posts...